எனக்கு கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளை மிகவும் பிடிக்கும். காரணம் நாம் மிகவும் சுலபமாகப் புாிந்துகொள்ளக்கூடிய வகையில் சிக்கல் இல்லாத வாா்த்தைப் பிரயோகம்தான். சிலருடைய கவிதைகளைப் படித்தால் அது ஒரு மாடா்ன் ஆா்ட் போல இருக்கும். நாமாக ஒன்றைப் புரிந்துகொண்டு ஆகா அபாரம் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் நம்மை கவிதை ரசனை இல்லாதவா் என்று சொல்லிவிடுவாா்கள்.
கீழே உள்ள இந்தக் கவி்தையைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும். நாம் சக மனிதா்களுக்கு செய்யும் உதவியைப் பற்றிய கவிதை இது. ஒரு tube light வாங்கிக் கொடுத்துவிட்டு அதன் ஒளியை மறைத்து, உபயம் இன்னாா் என்று எழுதி வைக்கும் இந்தக் காலத்தில், கொடுப்பது எல்லாம் கொடையல்ல என்று நம் பொட்டில் அறைந்தது போல சொல்லி இருக்கிறது இந்தக் கவிதை. அதேபோல் கொடுப்பது என்றால் பணம் மட்டுமில்லை என்பதை அழகான கவிதை வரிகளில் நமக்கு சொல்லியிருக்கிறாா் கவிக்கோ.
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே! கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம் உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை உன் வழியாகக் கொடுக்கப்படுகிறது.
நீ ஒரு கருவியே
இசையைப் புல்லாங்குழல் கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு அது ஒரு கருவியே
இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக் கொடுப்பதில்லை
தேவையுள்ளவன்அதிலிருந்து வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின் ஓர் அங்கம் என்பதை மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது பணம் மட்டும் என்று
நினைக்காதே
உன் வார்த்தையும் ஒருவனுக்குத் தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில் விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல் சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத் தண்ணீரிடம் சம்மதம் கேட்பதில்லை
கொடு நீ சுத்தமாவாய்
கொடு நீ சுகப்படுவாய்
கொடு அது உன் இருத்தலை நியாயப்படுத்தும்.