”எண்கள் தேவையற்ற உரையாடல்கள்” – வண்ணதாசன் எழுதிய ஒரு சிறுகதையின் தலைப்பு இது. ஆனந்த விகடனில் வெளிவந்த இந்தச் சிறுகதை வண்ணதாசனின் சாகித்ய அகடமி விருது பெற்ற ”ஒரு சிறு இசை” என்ற புத்தகத்தில் உள்ளது. நல்ல புத்தகம். புத்தக கண்காட்சி நடைபெறும் சமயம். சுலபமாக கிடைக்கும். முடிந்தால் வாங்கிப் படிக்கவும்.
ஆனால் இந்தப் பதிவுக்கும் இந்தப் புத்தகத்திற்கும் சம்பந்தமில்லை. கதையின் தலைப்பு இன்றைய பதிவிற்கு பொருத்தமாக இருந்ததால் எடுத்துக் கொண்டேன். பொருத்தம்தானா என்பதை நீங்கள் இந்தப் பதிவை படித்துவிட்டு முடிவு செய்துகொள்ளுங்கள்.
ஒருவன் தன் இரு காதுகளிலும் தீக்காயத்துடன் டாக்டரிடம் வந்தானாம். டாக்டர் என்ன நடந்தது என்று கேட்டபோது அவன் சொன்னான். டாக்டர் நான் என்னுடைய துணியை அயர்ன் செய்து கொண்டிருந்தபோது ஒரு போன் வந்தது. செல்போன் என்று நினைத்து அயர்ன் பாக்ஸை எடுத்து என் காதில் வைத்துக் கொண்டேன்.
டாக்டர் கேட்டாராம். சரி ஒரு காது ஓகே. மற்றொரு காதை எப்படி சுட்டுக் கொண்டாய் ?
வந்தவன் சொன்னானாம். ”அந்தப் படுபாவி மீண்டும் போன் செய்து தொலைத்துவிட்டான்.
இது எப்போதோ ஒரு புத்தகத்தில் படித்த ஒரு ஜோக். இப்போது சொல்லும் ஒரு விஷயம் நான் சில நாட்களுக்கு முன் நேரில் கண்டது. லயோலா கல்லூரியைத் தாண்டி நுங்கம்பாக்கம் சுரங்கப் பாதையில் இரவு 7.30 மணி போக்குவரத்து நெரிசலில் என்னுடைய கார் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. எனக்கு சற்று முன்னால் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞன் சென்று கொண்டிருந்தார். அவருடைய செல்போன் அடித்திருக்க வேண்டும். ஒரு கையால் வண்டியை ஓட்டிக் கொண்டே தன்னுடைய சட்டைப்பையில் இருந்து செல்போனை எடுத்தார். எடுத்து யார் என்று பார்த்துக் கொண்டிருந்த சிலவினாடிகளில் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் சட்டென்று பிரேக் பிடிக்க இவருடைய வண்டி அதில் லேசாக இடித்த மறுகணம் கையிலிருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது. அடுத்த நொடி பக்கத்தில் சென்று கொண்டிருந்த இன்னொரு வாகனம் அந்த செல்போனில் ஏறி இறங்கியது. அவ்வளவுதான். அந்த செல்போனின் விலை எத்தனை ஆயிரம் ரூபாயோ. ஒரு நொடியில் சல்லிக் காசுக்கும் உபயோகம் இல்லாமல் ஆகிவிட்டது.பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அந்த இளைஞர் மீது கோபமாகவும் இருந்தது. ஏனென்றால் இப்போதெல்லாம் பைக்கை ஓட்டிக் கொண்டே காதுக்கும் தோளுக்கும் இடையில் செல்போனை வைத்துக் கொண்டு ”வலிப்பு வந்தது போல்” பேசிக் கொண்டு செல்லும் பலரை பார்க்கின்றேன். இதனால் அவர்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் எவ்வளவு ஆபத்து என்பதை உணர்வதேயில்லை.
செல்போன் என்பது ஒரு இன்றைய அறிவியலின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு வரையில்கூட ஒருவருக்கொருவர் நினைத்த நேரத்தில் பேசுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. அறிவியல் இதனை இன்று மிகவும் சுலபமாக்கிவிட்டது. வரங்களை எல்லாம் சாபங்களாக்கிக் கொள்ளும் திறமை படைத்த நாம் இன்று செல்போனையும் அப்படித்தான் சாபமாக்கிக் கொண்டு விட்டோமோ என்று சந்தேகமாக இருக்கிறது.
நம்மில் பெரும்பான்மையினருக்கு செல்போனை பயன்படுத்தத் தெரிவதில்லை. எனக்கு ஒருமுறை என்னுடைய நண்பன் போன் செய்தான். நான் ஒரு மீட்டிங்கில் இருந்ததால் உடனே எடுக்க முடியவில்லை. ஆனால் அவன் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்ததால், ஏதாவது அவசரமாக இருக்கப் போகிறது என்று மீட்டிங் இடத்தில் இருந்து வெளியே வந்து எதாவது அவசரமாக என்று கேட்டேன். அதற்கு அவன் ஒன்றுமில்லை. ஒரு சின்ன consulting தேவைப்படுகிறது. நீ free ஆனபிறகு பேசினால் போதும் என்று சொல்லி போனை வைத்துவிட்டான். இப்படி சாதாரணமாகப் பேசுவதற்கே தொடர்ந்து போன் செய்தால், உண்மையிலேயே அவசரமாக போன் செய்தால்கூட நாம் எடுக்காமல் விட்டுவிடுவோம்.
நான் யாருக்காவது போன் செய்து அடுத்த முனையில் இருப்பவர் கொஞ்ச நேரம் எடுக்கவில்லை என்றால் கட் செய்து விட்டு அவருக்கு என்ன காரணத்திற்காக போன் செய்தேன் அவசரமா இல்லையா என்று ஒரு சின்ன message அனுப்பிவிடுவேன். அவர்கள் அதைப் பார்த்து போன் செய்தால் சரி. இல்லையென்றால் ஏதாவது அவசரமாக இருந்தால் தவிர மீண்டும் கால் செய்ய மாட்டேன்.
செல்போன் என்பது நாம் பேசுவதற்கான ஒரு உபகரணம் அவ்வளவுதான். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். முன்பெல்லாம் நான் சாப்பிட உட்காரும் நேரத்தில் என்னுடைய செல்போன் அடித்தால் உடனே சென்று எடுத்து பேசுவேன். உடனே எடுப்பதுதான் நாகரீகம் என்று நானாக நினைத்துக் கொள்வேன். பேசி முடித்தவுடன் சாப்பாடு ஆறியிருக்கும். மனைவிதான் சூடாக இருப்பார்.
ஆனால் இப்போதெல்லாம் செல்போன் விஷயத்தில் நான் ஓரளவுக்கு கட்டுப்பாட்டை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டேன். செல்போனில் பொதுவாக யாருடன் பேசினாலும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேசுவதில்லை. அதற்கு மேல் பேசும் பேச்சு பெரும்பாலும் வெட்டிப் பேச்சாகத்தான் இருக்கும். இதில் விதிவிலக்குகள் கண்டிப்பாக உண்டு. உண்மையிலேயே ஒரு பிரச்சனையில் அல்லது வேதனையில் இருப்பவர்களுக்கு நம்முடைய ஆறுதல் வார்த்தைகள் மிகப்பெரிய நம்பிக்கையாக அமையலாம். அந்த நேரத்தில் சரியாக பத்து நிமிடம் ஆனதும் சரி பிறகு பேசலாம் என்று வைத்துவிட முடியாது. ஆனால் அந்த விதிவிலக்குகளை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
நான் அடிக்கடி நினைத்துக்கொள்ளும் இன்னொரு விஷயம். இப்போது அலுவல் நிமித்தமாக பிசியாக இருக்கிறோம். ஒரு கால் பேசி முடிப்பதற்குள் நம் செல்போனில் பல missed கால்கள் வந்து விடுகின்றன. இவர்களில் பெரும்பாலும் அவர்கள் அவசரத்திற்காக நம்மோடு பேசுபவர்கள். அவ்வளவுதான். உண்மையிலேயே நம்மீது அக்கரை கொண்டு எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உண்மையான அன்புடனும் அக்கரையுடனும் எத்தனை பேர் நம்மிடம் பேசுகிறதார்கள். அல்லது நாம்தான் அப்படி எத்தனை பேருடன் பேசுகிறோம். யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.
அதனால் எல்லா கால்களையும் பாய்ந்து எடுக்க வேண்டிய அவசியமில்லை. எடுக்க முடியாத நிலையில் இருந்தால் ஒரு message அனுப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து பேசலாம். ஒரு விஷயம் உண்மையிலேயே அவசரமாக இருந்தால் எப்படியாவது நம்மை வந்து அடைந்துவிடும். செல்போனும் போனும் இல்லாத காலத்திலேயே நல்லதும் கெட்டதும் உரியவருக்கு உரிய நேரத்தில் சென்று சோ்ந்துகொண்டுதான் இருந்தது.
உரையாடல் என்பது ஒரு கலை. அந்தக் கலையில் நாம் வல்லவர்களாகிவிட்டால் எவ்வளவு நேரம் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல. பேசி முடித்தவுடன் உரையாடிய இருவருக்கும் ஒரு மன நிறைவு ஏற்பட வேண்டும். மீண்டும் அவருடன் பேச வேண்டும் என்ற விருப்பம் உருவாக வேண்டும்.
யோசித்துப் பார்த்தால் செல்போனில் பேசும் இந்தக் காலத்திலும் நேருக்கு நேர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மகிழ்ச்சியாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் உரையாடல்கள்தான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது. செல்போன் just ஒரு மாற்றுக் கருவி. செல்போனுக்கு வெளியேயும் வாழ்க்கை இருக்கிறது.
எந்த உறவிலும் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளாமல் நாம் ஆக்கபூர்வமான முறையில் பிறருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இனிமையாக உரையாடக் கற்றுக் கொண்டால் நாம் வாழ்க்கயைில் வெற்றி பெற்று விட்டோம் என்று எடுத்துக் கொள்ளலாம். உரையாடுவதற்கு எண்களைவிட நல்ல மனங்கள் இருந்தால் போதும்.