நேற்றுதான் 2018-ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்து சொன்னதுபோல இருக்கிறது. அதற்குள் 2019-ம் ஆண்டு வந்து விட்டது. கடற்கரையில் நின்றுகொண்டிருக்கும்போது கடலின் அலைகள் நம் காலுக்கு அடியில் இருக்கும் மணலை அரித்துக்கொண்டு செல்வது போல் காலம் நம் கட்டளைக்கு காத்திருக்காமல் பறந்து கொண்டே இருக்கிறது. “Miles to go before I sleep” என்று சொல்லிக்கொண்டே துாங்கிவிட்டு காலம் வீணாகிவிட்டதே என்று கவலைப்படுகிறோம்.
கஜா புயலின் சோகங்கள், தற்காப்புக்கு என்று சொல்லி நெற்றியை குறிவைத்து சுடப்பட்டு இறந்த ஸ்டெர்லைட் துயரங்கள், இட்லி சாப்பிட்ட பில்லாக 1.17 கோடி என்ற அப்போலோ அபத்தங்கள், இப்படி நம்மைச் சுற்றி நடக்கும் பல அவநம்பிக்கை சம்பவங்கள், இதைத் தவிர தனித்தனியாக நம்மைத் தாக்கும் அன்றாட அவஸ்தைகள் – இவற்றையெல்லாம் கடந்துதான் வாழ்க்கையை நாம் நம்பிக்கையுடன் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு புத்தாண்டையும் அப்படித்தான் நாம் எதிர்கொள்கிறோம். அந்த நம்பிக்கை மட்டுமே நம்மை கவலை என்னும் கடலில் முழுகிவிடாமல் காப்பாற்றி வருகிறது.
சமீபத்தில் “Mind Full to Mindful” என்ற புத்தகத்தினை படித்தேன். அதிலிருந்த சில நம்பிக்கை விதைகளை இந்தப் புத்தாண்டு தொடங்கும் நேரத்தில் நமக்குள் விதைக்கலாம் என்று நினைக்கிறேன் – அடுத்த ஆண்டுக்குள் இவற்றில் சில விதைகளாவது நம் வாழ்வில் சந்தோஷ தருணங்களாக துளிர்க்கும் என்ற நம்பிக்கையில்.
புத்தரின் முதல் ஜென் தத்துவமாக நம்பப்படுவது ”ஒரு பூ மலரும் கணத்தில் உலகம் முழுவதும் வசந்தம் உருவாகிறது” (A Single flower blooms, and throughout the world it is spring).
நம் ஒவ்வொருவரின் மனமும் ஒரு மலர்தான். நம் மனது அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்போது உலகமும் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கிறோம். நம் மனது அமைதியற்று விரக்தியிலும் வேதனையிலும் இருக்கும்போது நம்மைச் சுற்றிய உலகத்தையும் அவநம்பிக்கையுடன் பார்க்கிறோம்.
புத்தர் சொல்கிறார். உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி என்பது வெளியில் தேடும் பொருள் அல்ல. அது உங்களிடமே இருப்பதை நீங்கள் உணர்வதுதான்.
உங்களால் நீங்கள் நினைத்த ஒரு உணவகத்திற்குச் சென்று நீங்கள் விரும்பிய உணவை அதன் விலையைப் பற்றி கவலைப்படாமல் ஆர்டர் செய்து சாப்பிட முடியுமா ? அப்படியென்றால் நீங்கள் இந்த உலகத்தில் உள்ள பல கோடிக்கணக்கான மக்களைவிட மிகமிக உயா்ந்த நிலையில் இருக்கிறீா்கள் என்று அர்த்தம். ஏனென்றால் இந்த உலகத்தில் இன்னமும் ஒரு வேளை உணவுகூட ஒழுங்காக சாப்பிட முடியாத வறுமையில் பல கோடி மனிதர்கள் உள்ளனர்.
எத்தனையோ பேருக்கு கிடைக்காத வசதியையும் வாய்ப்பையும் நாம் பெற்றிருந்தும் நம்மால் இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை என்றால், நமக்கு இன்னும் எவ்வளவு வசதிகள் கிடைத்தாலும் நம்மால் அதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
புத்தர் சொல்கிறார். இந்த கணத்தில் உங்களால் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடிந்தால் வாழ்க்கை உங்களுக்கு இன்னும் அதிக மகிழ்ச்சியை உருவாக்கும் தருணங்களை உங்கள் வாழ்வில் மலரச் செய்யும். இந்தக் கணத்தினை மகிழ்ச்சியாக அனுபவிக்காமல் ஏதோ ஒன்றிற்காக நீங்கள் குறைபட்டுக் கொண்டே இருந்தால் இந்த உலகமே உங்கள் வசமானாலும் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
ரோஜா மலர் தன்னைச் சுற்றி முட்களாக இருக்கிறதே என்று கவலைப்படாமல் தன்னுடைய நறுமணத்தினை பரப்பிக் கொண்டே இருக்கிறது. தன்னை கடந்து செல்லும் எல்லோருக்கும் எந்த பாரபட்சமும் இல்லாமல் தன்னுடைய நறுமணத்தினை அளிக்கிறது. ஒரே ஒரு நாள்தான் தன்னுடைய வாழ்க்கை பிறகு தான் உதிர்ந்து விடுவோம் என்ற எந்தக் கவலையும் இல்லாமல் இந்தக் கணத்தில் முழுமையாக தன்னை வெளிப்படுத்துகிறது.
புத்தர் இதைத்தான் நமக்கும் சொல்கிறார். உங்கள் வாழ்க்கையில் உங்களைச் சுற்றி நிறைய முட்களும் தடைகளும் சூழ்ந்து இருந்தாலும் உங்கள் மனதில் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த மகிழ்ச்சியை உங்களை கடந்து செல்லும் எல்லோருக்கும் அந்த மலரின் நறுமணத்தினைப் போல பரப்பிக் கொண்டே இருங்கள்.
நிகழ் கணத்தில் முழுமையாக வாழ்வதுதான் ஜென் தத்துவம். இது நம்ம ஊர் போதிதர்மர் உலகத்துக்கு சென்று பரப்பியதுதான். நாம்தான் பின்பற்றத் தவறிவிட்டோம்.
நாம் இந்தக் கணத்தில் வாழவில்லை என்பதற்கு மிகச்சாதாராண உதாரணம். வீட்டை நன்றாக பூட்டிவிட்டு வெளியே சென்றாலும், நன்றாகத்தான் பூட்டினோமா என்று ஒரு சந்தேகம் வருவது. கார் சாவியை எங்கே வைத்தோம் என்று அடிக்கடி தேடுவது – இப்படி பல சொல்லாம்.
நிகழ் கணத்தில் நம்மால் வாழ முடிந்தால் நம்முடைய விழிப்புணர்வு நிலை பலமடங்கு அதிகரிக்கும். வாழ்வில் நாம் தவற விட்டுக் கொண்டிருக்கும் பல தருணங்களை நம்மால் உணர முடியும். நாம் செய்யும் செயல்களில் ஒருவித ஒழுங்கும் அமைதியும் உருவாகும். பாரதி சொல்வது போல
”தேடிச்சோறு நிதம் தின்றுபல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்யும்
பல வேடிக்கை மனிதரைப்போலே”
நாமும் வீழாமல் இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
நிகழ் கணத்தில் வாழ்வதை இந்தப் புத்தாண்டிலிருந்தாவது பின்பற்ற நினைக்கலாம் என்று இருந்துவிட வேண்டாம். அதற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறது. இந்தக் கணத்திலிருந்து வாழத் தொடங்குவோம்.