Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

தும்பை விட்டு விட்டு

January 18, 2017

சட்டக் கல்லூரியில் படிக்கும் எனது மகள் நிவாஷினி இன்று காலை கல்லூரி சென்றவுடன் போன் செய்தாள் . “அப்பா இன்று எங்கள் college strike. எல்லோரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக “மெரினா” செல்கிறார்கள். நானும் செல்லட்டுமா?” என்று கேட்டாள். ஒரு அப்பாவாக ஒரு சின்ன தயக்கம் எனக்குத் தோன்றியது. அங்கே சென்று ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்று.

உடனே இன்னொரு எண்ணமும் தோன்றியது. அங்கே போராடும் மாணவ மாணவிகள் எல்லோருக்கும் பெற்றோர்கள் இருப்பார்களே. அந்த மாணவர்கள் எல்லாம் தங்களுடைய சுயநலத்துக்காகவா போராடுகிறார்கள். இப்படி பொது நலத்துக்காக போராடும்போது, “நீ மட்டும் போகாதே. பத்திரமாக வீடு வந்து விடு” என்று சொல்வது எவ்வளவு சுயநலமாக இருக்கும் என்று தோன்றியது. “பத்திரமாக போய் விட்டு வா” வாழ்த்திச் சொல்லி அனுப்பினேன். எனது மனைவியும் என் மனநிலையில்தான் இருந்தார்.

எனக்கு நினைவு தெரிந்து தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக ஒரு போராட்டத்தில் இறங்கி இருப்பது இப்போதுதான். ஒரு பலமான அரசியல் தலைமை இல்லை என்பதும் ஒரு காரணம் என்றாலும், நம்முடைய இளைஞர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களில் மிகுந்த கோபம் கொண்டு அதை எதிர்ப்பதற்கு ஒரு காரணியாக ஜல்லிக்கட்டை கையில் எடுத்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அது உண்மையாக இருந்தால் ஜல்லிக்கட்டு is just the beginning.

தற்போதைய நம்முடைய இளைஞர்கள் பொதுவாக நாட்டு நலனைப் பற்றி அவ்வளவு கவலைப் படாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார்கள் என்ற பொதுவான குற்றச்ச்சாட்டை இந்தப் போராட்டம் தகர்த்து ஏறிந்து இருக்கிறது.

முன்பெல்லாம் corporate media சொல்வதுதான் நியூஸ். இப்போது social media எல்லா விஷயங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக பிடுங்கி விடுகிறார்கள். மக்களை முட்டாளாக்க நினைக்கும் அரசியல்வாதிகளை மக்கள் முட்டாளாக்கி விடுவார்கள். அதனால்தான் போஸ்டர் அடித்து அது காய்வதற்குள் சாணி அடித்து விடுகிறார்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம் இந்த இரண்டு மூன்று நாட்களாக நடக்கும் இந்தப் போராட்டம் மிக மிக பொறுமையுடனும் பொறுப்பாகவும் நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை லட்சம் இளைஞர்கள் திரண்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு எவ்வளவு போலீஸ் போட்டாலும் பத்தாது.

இந்தப் போராட்டத்தை சீக்கிரம் நல்ல முறையில் முடிவுக்கு கொண்டு வருவது அரசாங்கத்தின் கையில் இருக்கிறது. ஏனென்றால் எதற்கும் ஒரு boiling point இருக்கிறது. நிலைமை கைமீறாமல் தடுப்பது அரசாங்கத்தின் முதல் கடமை. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பதால் இந்த உதாரணம் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன். “தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க வேண்டாம்”.

இளைஞர்களின் அடுத்தப் போராட்டம் டாஸ்மாக்கை மூடுவதற்கும், மணல் கொள்ளைகளை தடுத்து நீர்நிலைகளை காப்பதற்குமாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களாய் நம் இயற்கை அன்னை வெள்ளமாய் 2015 ல் மழை பொழிந்தும் இப்போது அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கிறோம். இதை வெட்கக் கேடு என்று சொல்வதா அல்லது சாபக் கேடு என்று சொல்வதா ? இன்னொரு நல்ல மழை வந்தாவது நம் பிரச்சினை குறையட்டும் என்று இயற்கையிடம் பிரார்த்திப்பதைத் தவிர இப்போது நமக்கு வேறு வழியில்லை.

எண்ணங்களை விதைத்து வைப்போம். சீக்கிரம் துளிர்க்கட்டும்..