Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

கட்டாய ஹெல்மெட்

June 28, 2015

ஜூலை 1 முதல் வசூல் வேட்டை தீவிரமாகும். அன்றிலிருந்து ஹெல்மெட் அணிவது மீண்டும் கட்டாயமாகிறது. சில வருடங்களுக்கு முன்புதான் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. எப்போது அதை வாபஸ் பெற்றார்கள், மீண்டும் கட்டாயமாக்குவதற்கு ?

நாட்டில் தினமும் நடக்கும் சாலை விபத்துக்களைப் பற்றி அறியும் போது தலைக் கவசத்தின் அவசியத்தை யாரும் மறுக்க முடியாது. ஆனால் நமது அரசாங்கம் செய்துள்ள அறிவிப்பைப் பார்க்கும் போது மக்களின் உயிர் மேல் இருக்கும் அக்கறையை விட stock clearance sale முனைப்போடு செயல்படுவது போல் உள்ளது.

மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஹெல்மெட் அணிந்து சென்றும் கிரிதரன் என்ற இளைஞர் விபத்து என்ற பெயரில் அநியாயமாக கொல்லப்பட்டார். ஒழுங்கான சாலை வசதிகள், விளக்கு வசதிகள் இல்லாமல் பல விபத்துக்கள் நடக்கின்றன. இதைப் பற்றியெல்லாம் அரசாங்கம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது.

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிய வேண்டும். சரி. மிகவும் நியாயமானது. பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. இனிமேல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது கையிலேயே ஒரு ஹெல்மெட்டையும் கொண்டு செல்வது உசிதம். வழியில் அப்பா, அண்ணன், கணவன் , நண்பன் என்று யாரைப் பார்த்தாலும் அவர்களுடன் வண்டியில் ஏறி வருவதற்கு வசதியாக இருக்கும்.

இன்று சாலை விபத்துக்களின் மூல காரணமாக இருப்பது மது என்ற அரக்கன். ஊரெங்கும் பார்களைத் (bar) திறந்து அரசாங்கமே ஊற்றிக் கொடுத்துவிட்டு கட்டாய ஹெல்மெட் என்று சொல்வது காறித் துப்பிவிட்டு கன்னத்தை துடைத்துக் கொள் என்று சொல்வது போல் உள்ளது.

ஹெல்மெட் எல்லாம் விற்றுத் தீர்ந்த பிறகு கட்டாய ஹெல்மெட் கட்டாயம் பிசுபிசுத்துப் போகும். அதுவரை காந்தி சிரிக்கும் கரன்சி நோட்டுக்கள் கொஞ்சம் கைவசம் இருக்கட்டும்.