Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

மக்களால் நான்

December 6, 2016

மரணம் மனிதர்களின் மதிப்பை எப்போதும் குறைப்பதில்லை. முடிந்த வரை அதிகப்படுத்திவிட்டுதான் செல்கிறது. நம் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணமும் அவருடைய மதிப்பையும் புகழையும் பன்மடங்கு அதிகப் படுத்திவிட்டுச் சென்று இருக்கிறது.

நம்மைச் சுற்றி “ததாஸ்து” தேவதைகள் சுற்றிக் கொண்டு இருப்பதாக சொல்வார்கள். அதாவது நாம் ஏதாவது சொன்னால் அந்த தேவதைகள் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்வார்களாம். ஜெயலலிதாவுக்கு அப்படிப் பட்ட தேவதைகள் அதிகம் போல இருக்கிறது. அவர் சொன்ன பல விஷயங்கள் அப்படியே ஆகி இருக்கின்றன.

அப்படித்தான் “மக்களால் நான் மக்களுக்காக நான்” என்ற வார்த்தையும் அப்படியே நடந்திருக்கிறது. அதிமுக தொண்டர்கள் அவருக்கு மிகப் பெரிய பலம். இன்றைய இறுதி ஊர்வலத்திலும் அதை அவர்கள் மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள். அதைப் போல தொண்டர்களுக்கும் அவர்தான் மிகப் பெரிய பலம். தன்னைச் சுற்றி ஆயிரம் எதிரிகள் இருந்தும் “என் கண்ணுக்கு எட்டியவரை எதிரிகளே இல்லை” என்று சொல்லி தன் தொண்டர்களை உற்சாகப்படுத்தியவர். அதிமுக தொண்டன் ஒவ்வொருவனும் தன்னுடைய மிகப் பெரிய பலத்தை இன்று இழந்து நிற்கிறான்.

ஜெயலலிதாவின் காலில் ஒவ்வொரு முறையும் நம் அமைச்சர்கள் மொத்தமாக பொத்தென்று விழும்போது எரிச்சலாக இருக்கும். ஆனால் இன்று ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் காலைத் தொட்டு முதல்வர் OPS கண்ணீர் விட்ட போது மனம் கனத்தது. இன்று அவர் அழுததும் காலில் விழுந்து வணங்கியதும் உண்மையிலேயே out of gratitude தான். ஏனென்றால் ஜெயலலிதா இருக்கும் போது ஒப்பாரி வைத்த பலர் இன்று ஒப்புக்கு கூட அழுது பார்க்கவில்லை.

ஜெயலலிதாவின் ஆளுமைக்கு அவர் தன் வாழ்வில் சில தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் அவர் இன்னும் மகத்தான உயரங்களை அடைந்து இருப்பார். அவர் தன்னுடைய தவறுகளால் கீழே அடிக்கடி சறுக்கி விழுந்தாலும் காலம் அவரை எப்போதும் தூக்கிப் பிடித்துத்தான் இருக்கிறது. இப்போது காலம் ஆன பின்னும்.

எம்ஜிஆர் மறைவின் போது சென்னையில் நடந்த வன்முறை சம்பவங்கள் வரலாற்றின் கறை. அப்படி எந்த வன்முறையும் இல்லாமால் அமைதியாக நடந்தது இன்றைய ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம். உண்மையிலேயே காவல் துறையை மிகவும் பாராட்ட வேண்டும். வீட்டில் sofa வில் வசதியாக உட்கார்ந்து ஒரு நாள் கண் விழித்து டிவி பார்த்தாலே மறுநாள் உடம்பு மிகவும் சோர்வாகி விடுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சரியான உணவு தூக்கம் இல்லாமல் நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டோ இருந்து தொண்டர்களை சமாளித்து VIP களுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. Hats Off to Tamil Nadu போலீஸ்.

ஜனவரி 21, 1999 ம் ஆண்டு NDTV நேர்காணலில் நிருபர் கேட்கிறார். உங்களுக்கு அரசியலை விட்டு விலகும் எண்ணம் இருக்கிறதா ? அதற்கு ஜெயலலிதா சொன்ன பதில். அதுதான் என் கனவு. இன்று மரணம்தான் அவரது கனவை மெய்ப்பித்து இருக்கிறது.

எம்ஜிஆருக்கு பின் அதிமுகவுக்கு ஜெயலலிதா இருந்தார். இப்போது ஜெயலலிதாவிற்கு பின் யார் ? நல்லதே நடக்கட்டும்.