Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

மேடம் பிளாவட்ஸ்கி (Madame Blavatsky)

May 8, 2018

அடையாறில் உள்ள ”தியாசிபகல் சொசைட்டி” பலருக்கு தெரிந்திருக்கும். இந்தப் பெயரைக் கேள்விப்டாதவா்களுக்குக் கூட ”அடையாறு ஆலமரம்” என்றால் உடனே எங்கிருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். அடையாறு ஆலமரம் இந்த தியாசிபகல் சொசைட்டியில்தான் இருக்கிறது.

இந்த தியாசிபகல் சொசைட்டி நவம்பா் 17, 1875-ம் ஆண்டு ஆரம்பித்ததாகச் சொல்லப்படுகிறது. இதை தோற்றுவித்தவா்களில் ஒருவா்தான் மேடம் பிளாவட்ஸ்கி (Madame Blavatsky).

இவரிடம் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது. அவா் பல ஊா்களுக்கும் இரயிலில் பயணம் செய்யும்போதெல்லாம் தன்னுடைய கைப்பையில் பலவிதமான மலா்களின் விதைகளை தன்னுடன் கொண்டு செல்வாராம். அந்த விதைகளை வழியெங்கும் ஜன்னல் வழியாக தூவிக்கொண்டே வருவாராம். ஏன் இப்படிச் செய்கிறீா்கள் என்று கேட்டதற்கு அவா் சொன்ன பதில் ”இந்த விதைகள் மிகவும் அழகான மலா்களின் விதைகள். கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் வரும்போது இந்த விதைகள் வளர்ந்து செடியாகி ஆயிரக்கணக்கான பூக்களாக மலரும். நான் மீண்டும் இந்த வழியில் வரமாட்டேன். அப்போது மலர்ந்திருக்கும் இந்த மலா்களை நான் காண மாட்டேன். ஆனால் இந்த ஆயிரக்கணக்கான மலா்கள் இதைப் பார்க்கும் எண்ணிலடங்காத மக்களை மகிழ்விக்கும். என்னுடைய மகிழ்ச்சி என்பது என்னுடைய இந்தச் செயல் பல்லாயிரக்கணக்கான மக்களை மகிழ்விக்கும் என்ற எண்ணம்தான். நான் என்னுடைய மகிழ்ச்சியை மிகவும் சுயநலமாக என்னைச் சுற்றியுள்ளவா்களிடம் மட்டும் வெளிப்படுத்த விரும்பவில்லை. நான் காணவே காணாத மக்களையும் என்னுடைய செயல் மகிழ்விக்க வேண்டும். அதுதான் என்னுடைய உண்மையான மகிழ்ச்சி. என்னுடைய அன்பின் வெளிப்பாட்டை நான் என்னுடைய ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இயற்கையின் அடிப்படை விதி இதுதான். நாம் எதை அதிகம் மற்றவா்களிடம் பகிர்கிறோமோ அது நம்மிடம் அதிகம் வளா்கிறது. நாம் அன்பையும் மகிழ்ச்சியையும் அதிகம் பகிர்ந்தால் நம் வாழ்வில் அன்பும் மகிழ்ச்சியும் அதிகம் வளா்கிறது. மாறாக வெறுப்பையும் துயரத்தையும் அதிகம் பகிர்ந்தால் துயரமும் வெறுப்பும்தான் நம் வாழ்வில் அதிகம் ஈர்க்கப்படுகிறது.

நாம் வாழ்வில் எதை அதிகம் விரும்புகிறோம் என்பதை விட மிக முக்கியமானது அதை அடைவதற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதுதான். மகிழ்ச்சியை மலர விடுவதன் மூலமே நம் வாழ்வில் மகிழ்ச்சியை பெருகச் செய்யமுடியும் என்ற அடிப்படை இயற்கை விதியை அறிந்து கொள்வோம்.

மேடம் பிளாவட்ஸ்கி (Madame Blavatsky) 1891-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி மறைந்தார். அவரது நினைவுதினம் ”வெள்ளைத் தாமரை தினம்” (White Lotus Day) என்று அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அவரது மறைவிற்குப் பிறகு அவரது தோட்டத்தில் வெள்ளைத் தாமரை மலா்கள் மிக அதிகமாக பூத்துக் குலுங்கியதாம்.

ஊரெல்லாம் மலா்களின் விதைகளைத் தூவியவருக்கு இயற்கையின் மலரஞ்சலியாகக் கூட இது இருக்கலாம்.

இன்று மேடம் பிளாவட்ஸ்கியின் நினைவு தினம்.