Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

Salutations to Swami Vivekananda and Maharishi Mahesh Yogi

January 11, 2014

சுவாமி விவேகானந்தரும் மகரிஷி மகேஷ் யோகியும்

இன்று (12/01/2014) இந்தியாவில் பிறந்து உலகில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டிய இரு ஞான சூரியன்களின் பிறந்த நாள்.

சுவாமி விவேகானந்தரைப் பற்றி விளக்கம் தேவையில்லை. நாம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த காவியுடை காவிய நாயகன் விவேகானந்தர். ஆனாலும் மகரிஷி மகேஷ் யோகி பரவலாக அறியப்பட்டிருந்தாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த வெள்ளுடை வேந்தரும் ஆன்மிக சக்தியால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் கொண்டுவர முடியும் என்று முயற்சி செய்து அதில் வெற்றியும் அடைந்தவர்.

இன்று யோகா, தியானம் போன்றவை பெரும்பாலான மக்களின் காபி, டீ பழக்கத்தை போல சாதாரண விஷயங்கலாகிவிட்டது. ஆனால் சுமார் 50 – 60 வருடங்களுக்கு முன்பே “ஆழ்நிலை தியானம்” என்ற பெயரில் பதஞ்சலி யோக சூத்திரத்தை பாமரருக்கும் கொண்டு சென்றவர் இவர்.

இவருக்கும் சுவாமி விவேகந்தருக்கும் உள்ள சில அடிப்படை ஒற்றுமைகள் :

1) இருவருமே தங்கள் குருவின் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள் மட்டுமல்ல. இருவருமே தங்கள் குருவின் முழு ஆசியை பெற்றவர்கள்.

2) இருவருமே சமுதாய வளர்ச்சியும் ஆன்மிக வளர்ச்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தது என்பதை உணர்ந்து செயல்பட்டவர்கள். நாடெங்கிலும் உள்ள ராமகிருஷ்ண மடங்களும், மகரிஷி வித்யா மந்திர் பள்ளிகளுமே இதற்கு சாட்சி.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆழ்நிலை தியானம் கற்றுக்கொள்ள விரும்பிய போது என் அப்பா, நான் ஏதோ சாமியாராகிவிடுவேன் (?) என்ற பயத்தில் சற்று தயங்கினார். ஒருவேளை இப்போதைய சில சாமியார்களின் வசதி வாய்ப்பையும் அவர்கள் வாழ்க்கையை அனுபவிப்பதியையும் (??) பற்றி தெரிந்திருந்தால் சற்று தயங்கியிருக்க மாட்டார் (அதிகமாக பயந்திருப்பார்!!).

ஆன்மிகமும் வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில் சுவாமி விவேகானந்தரும் மகரிஷி மகேஷ் யோகியும் உண்மையில் நாம் என்றும் வணங்கத்தக்க ஆன்மீக பொக்கிஷங்கள்.

சுவாமி விவேகானந்தரையும், மகரிஷி மகேஷ் யோகியையும் நினைக்கும் இந்த நாளில் நான் என்றும் வணங்கும் ரமண மகரிஷியையும் தியானித்துக் கொள்கிறேன்.