Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

அணைந்து விடாத அக்னிச் சிறகுகள்

July 27, 2015

நாம் வாழ்நாளில் ஒரு முறை கூட நேரில் பார்க்காத ஒரு மனிதரின் மரணம் நம் இதயத்தில் ஒரு வலியை உருவாக்கி, நம் கண்களில் ஒரு சொட்டு கண்ணீரையாவது வரவழைத்தால் அந்த ஆத்மாவிற்கு பெயர்தான் மகாத்மா.

இந்தியாவின் ஒரு கோடியில் பிறந்து மறு கோடியில் இறந்தாலும், ஒவ்வொரு இந்தியரும் தனக்கு நெருக்கமானவர் இவர் என்று நினைக்க வைத்தால் அவர் சாதாரண மனிதராக இருக்க முடியாது. ஒரு மகானாகத் தான் இருக்க முடியும்.

தூக்கத்தில் வருவது அல்ல கனவு. உன்னை தூங்கவிடாமல் இருக்க வைப்பதுதான் கனவு என்று கனவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கிய மாமேதை கலாம் தன்னுடைய அக்னிச் சிறகுகளை விரித்து விண்ணோக்கிப் பறந்து விட்டார்.

நான் என்னுடைய வாழ்வின் இறுதியில் குழந்தைகளுடன் நடுவில் இருக்க (இறக்க) விரும்புகிறேன் என்ற தன்னுடைய கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நம் நன்றிகள்.

இப்படி ஓயாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறீர்களே – எப்போது ஓய்வு எடுப்பீர்கள் ? என்ற கேள்விக்கு கலாம் அளித்த பதில் “ஓய்வு என்பது என்ன. நமக்குப் பிடித்த வேலையை மகிழ்ச்சியாக செய்து கொண்டு இருப்பதுதான். அதனால் நான் எப்போதும் ஓய்வாகத் தான் இருக்கிறேன்”. மரணத்தின் கடைசி நொடி வரை உழைத்த மனிதனுக்கு இனி நிரந்தரமான ஓய்வு.

ஒருமுறை கலாமிடம் சிறந்த தலைவனுக்கான அடிப்படைத் தகுதிகள் (good leadership qualities) என்ன என்று கேட்டபோது அவர் பட்டியலிட்ட ஆறு அடிப்படைத் தகுதிகள்:

  1. 1. உயரிய நோக்கம் ( Great Vision)
  2. 2. புதிய பாதையில் பயனித்தல் (Able to travel the untravelled path)
  3. 3. தோல்விகளை எதிர்கொள்ளும் திறமை (Able to manage failures)
  4. 4. முடிவெடுக்கும் துணிவு (Courage to take decision)
  5. 5. நேர்மையான செயல் மூலமான வெற்றி (Work with integrity and succeed with it)
  6. 6. மனிதர்களுடன் பழகும் திறன் (Able to mix with people)

ஆறு அடிப்படைத் தகுதிகள் மட்டுமல்லாது, பல நூறு தகுதிகள் பெற்ற கலாம் உங்களுக்கு ஒவ்வொரு இந்தியனின் சார்பிலும் ஒரு சலாம்.

கலாமின் அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தில் இருந்து சில வைர வரிகள்.

ஒருவர் தன் வாழ்நாளில் தனக்குரிய இடத்தில் என்ன நிலையில் இருக்கிறாரோ, நல்லதோ கெட்டதோ எந்த நிலையை அவர் எட்டி இருந்தாலும் அது தெய்வ சங்கல்பம்.

உங்களுடைய குழந்தைகள் எல்லாம் உங்களுடைய குழந்தைகள் அல்ல. அவர்கள் உங்கள் மூலமாக வந்தவர்கள். அவர்களிடம் நீங்கள் உங்கள் அன்பை வழங்கலாம். ஆனால் உங்களுடைய சிந்தனைகளை அல்ல. தங்களுக்கு என்ற சிந்தனை கொண்டவர்கள் அவர்கள்.

நம்பிக்கை வைத்தால் உன் தலைவிதியை உன்னால் மாற்றி அமைக்க முடியும்.

எந்த சிக்கலான சூழ்நிலையிலும் பலனைப் பற்றி யோசிக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இரு. ஏனென்றால் சிக்கலான எல்லா விஷயங்களிலுமே இழப்பு என்பது தவிர்க்க முடியாது.

மற்றவர்களை அறிந்தவன் பண்டிதன். தன்னை அறிந்தவன்தான் உண்மையான கல்விமான். விவேகம் தராத கல்வி பயனற்றது.

எதிர்கால வாய்ப்புகள் பற்றி யாரும் கவலைப்படவே கூடாது. மாறாக வலுவான அடித்தளம் அமைப்பது அது பற்றிய ஆர்வம், தேர்வு செய்துள்ள துறையில் தீவிரமான நாட்டத்தை வளர்த்துக் கொள்வது என்பதுதான் மிகவும் முக்கியம்.

கடவுள் உங்களுடைய நம்பிக்கையாகவும், ஜீவனாகவும் , வழிகாட்டியாகவும் இருந்து உங்களுடைய எதிர்காலத்தை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் ஒளி வழங்கட்டும்.

எனக்கான வாய்ப்புக்களை நானேதான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

சர்வ சக்தி கொண்ட எல்லைகள்தான் உன்னுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எவ்வளவு அதிக சுமையையும் உன்னால் மட்டுமே தூக்க முடியும். எவ்வளவு வேகமாகவும் உன்னால் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். எவ்வளவு கடுமையாகவும் உன்னால் மட்டுமே பாடுபட முடியும். எவ்வளவு தொலைவாக இருந்தாலும் உன்னால் மட்டுமே பயணப்பட முடியும்.

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி. சந்தேகத்தை அறவே விடுத்து அலட்டிக் கொள்ளாமல் இருக்கும்போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும். பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொண்டு சமாளியுங்கள். வாட்டி வதைத்தாலும் கடுமையாகப் பாடுபட்டால்தான் பிரச்சனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காணமுடியும். பிரச்சனைகள்தான் உள்ளார்ந்த துணிச்சலையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகின்றன.

நான் என்றுமே தெய்வ நம்பிக்கை கொண்டவன். எனது பணியில் இறைவனையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டிருக்கிறேன். அபாரமான வேலைக்கு எனக்கிருக்கும் திறமையை விட அதிகம் தேவை என்பதை அறிந்திருந்தேன். எனவே கடவுளால் மட்டுமே தரக் கூடிய உதவியை நாடினேன்.

உனது எல்லா நாள்களிலும் தயாராக இரு எவரையும் சம உணர்வோடு சந்தி நீ பட்டறைக் கல்லானால் அடிதாங்கு நீ சுத்தியானால் அடி. உனது பயணத்தில் நடை போடுவதற்கு இறைவன் உனக்கு ஒளி காட்டுவான். கற்றலின் ஒரு அங்கமாக தவறுகளை அனுமதிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

உங்கள் முன்னே நடமாடித் திரிவதற்காக எந்த தேவ தூதரையும் நாங்கள் அனுப்பவில்லை. ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக நடந்து கொள்வதை வைத்துதான் உங்களை சோதிக்கிறோம். அதற்குக் கூட உங்களிடம் பொறுமை இல்லையா ?

கவலைப் படாதே, முணுமுணுக்காதே மனம் தளராதே, இப்போதுதான் வாய்ப்புக்கள் வர ஆரம்பித்துள்ளன சிறந்த பணி இன்னும் ஆரம்பமாகவில்லை சிறந்த பணி இன்னும் முடிக்கப் படவில்லை. காலத்தின் மணல் பரப்பில் உன் காலடிச் சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உனது கால்களை இழுத்து இழுத்து நடக்காதே. உங்களுடைய கல்வியையும் திறமையையும் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அறிவாற்றல்தான் நிதர்சனமான நிலையான சொத்து என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. வெற்றி அடைந்த எல்லோரிடமும் காணப்படும் பொதுவான அம்சம் முழுமையான பொறுப்புணர்வு. வெற்றிகளால் மட்டுமே நாம் உயர்ந்துவிட முடியாது. தோல்விகளாலும் நாம் முன்னேறுவோம் என்பதை எப்போதுமே மறந்துவிடக் கூடாது.

கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு எதிர்காலத்திற்காக மட்டும் வாழ்வது சாரமற்ற முழுமை அடையாத ஒரு வாழ்க்கை. சிகரத்தை எட்டுவதற்காக மலையின் பல்வேறு பகுதிகளை அனுபவிக்காமல் மலை ஏறுவதைப் போன்றது அந்த வாழ்க்கை. இந்தப் பகுதிகளில்தான் மலையின் ஜீவன் இருக்கிறது. சிகரத்தில் அல்ல. மற்றவர்களின் சிந்தனையில் விளைந்த ஆதாயங்களைப் பயன்படுத்திக் கொண்டு நான் என்றுமே வாழ்ந்தது இல்லை. எனது வாழ்க்கையை நிர்ணயம் செய்திருப்பது எனது இயல்புதான்.

யாருக்கு பெருமை போய்ச் சேரும் என்பதைப் பொருட்படுத்தாமல் செயல் ஆற்றுபவர்கள் மூலம்தான் மகத்தான காரியங்களை இறைவனால் நிறைவேற்ற முடியும். அபாரமான சாதனைகளை நிகழ்த்துவதில் ஆழமான ஈடுபாடு கொள்ளுங்கள். உடனே கிடைக்கும் செயற்கையான சந்தோஷத்தைத் துரத்தி அலையாதீர்கள்.