Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

சித்தி

July 28, 2014

இன்று காலை எழுந்ததும் எங்கள் குடும்ப நண்பர் சுதாவிடமிருந்து “சித்தி இறந்துவிட்டார்” என்ற அதிர்ச்சியான குறுந்தகவல் (SMS) வந்தது.

சுமார் 7 மாதங்களுக்கு முன்புதான் சித்தியின் கணவர் மணி ஐயர் காலமானார். யாருக்கும் தொந்தரவு தராத நல்ல மரணம் என்று மனம் நினைத்தாலும், மணி ஐயர் காலமான பிறகு சித்தியை பார்க்க வேண்டும் என்று நானும் என் மனைவியும் பல முறை நினைத்தும் ஏதோ ஒரு காரணத்தினால் தள்ளிக் கொண்டே போனது. ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது தன் கடமையை செய்து கொண்டே இருக்கிறது.

சித்தியும், மணி ஐயரும் எங்கள் ரத்த சம்பந்தம் அல்ல. ஆனால் தன்னுடைய மாறாத அன்பால் எங்கள் குடும்ப உறவாய் ஆனவர்கள். சுமார் 25 வருட கால உறவு இது.

மணி ஐயர்தான் எங்களுடைய திருமணத்தை நடத்தி வைத்தவர். திருமணத்தின் ஒவ்வொரு சடங்கையும் விளக்கி, வேத மந்திரங்களின் பொருளைச் சொல்லி, மந்திரங்களை ஒழுங்காக உச்சரிக்கச் செய்து எங்கள் திருமணத்தினை நடத்திக் கொடுத்தார்.

நாங்கள் அவர் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் நீங்களெல்லாம் எங்கள் குழந்தைகள் கண்ணா என்று அன்புடன் உபசரிப்பார்கள்.

அவர்கள் வசித்த சிறிய வீட்டில் எத்தனை பேர் எத்தனை முறை சென்றாலும் முகம் கோணாமல் சுவையான காபி (coffee) கலந்து கொடுப்பார்கள். ஏதாவது sweet அல்லது பலகாரம் செய்தால் “சீனு உனக்கு பிடிக்குமே என்று வைத்திருந்தேன்” என்று சொல்லி கொடுப்பார்கள்.

இன்று நம்மில் எத்தனை பேர் வசதி இருந்தும் உறவுகளையும், நட்பையும் வீட்டுக்கு அழைத்து விருந்தோம்ப நினைக்கிறோம். மிஞ்சிப் போனால் Party என்ற பெயரில் ஏதாவது ஒரு ஹோட்டலில் விருந்து கொடுத்து உறவைப் பேணி (?) விடுகிறோம்.

இப்படி பல நினைவுகளோடு சித்தியை கடைசியாக பார்க்கச் சென்றோம். சித்தியின் மகன் சிவா என்னைப் பார்த்ததும், “அண்ணா, அம்மாவுக்கு AC யில் தூங்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஆசை. ஆனால் அந்த ஆசையை என்னால் கடைசி வரை நிறைவேற்ற முடியவில்லை” என்று அழுதான்.

ஆனால் குளிர்பதனப் பெட்டியில் வைக்கபட்டிருந்த சித்தியின் முகம் தன் மகன், AC யில் தூங்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை நிறைவேற்றி விட்டான் என்பது போல மலர்ச்சியுடனும் பொலிவுடனும் இருந்தது.

உடலுக்குத்தான் மரணம், ஆத்மாவுக்கு அல்ல.