Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

கலங்காதிரு மனமே

January 14, 2016

Positive-ஆன விஷயங்களை அவ்வளவு சுலபத்தில் ஏற்க மறுக்கும் நம் மனம் negative-ஆன விஷயங்களை மட்டும் உடனே உடும்புப் பிடியாய் பிடித்துக் கொள்கிறது. யாரவது நம்மைப் பார்த்து “என்ன இன்றைக்கு smart-ஆக இருக்கீங்க” என்றால், நம் மனம் அதை நம்ப மறுத்து, “நம்மை கலாய்க்கிறாங்களோ” என்று எண்ண வைக்கும் (சில நேரங்களில் அது உண்மையாகக் கூட இருக்கும் அது வேறு விஷயம்). ஆனால் அதே நேரத்தில் நல்லா இருக்கும் நம்மைப் பார்த்து யாராவது என்ன dull-ஆ இருக்கீங்க என்று சொன்னால் உடனே ஆமாம் என்று அதற்கு ஒரு காரணம் சொல்லி நல்லா இருந்த நாம் dull-ஆக செல்வோம்.

நேற்று ஒரு வாரப் பத்திரிகையில் பெண்களுக்கு வரக் கூடிய ஒரு நோய் குறித்த ஒரு கட்டுரையைப் படித்தேன். அந்தக் கட்டுரையில் இந்த நோய் வரக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ள பெண்கள் என்று அவர்கள் குறிப்பிட்டது பின் வரும் பெண்கள்:

1. உடல் பருமனாக இருப்பவர்கள்
2. 30 வயதைக் கடந்த பெண்கள்
3. மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லாதவர்கள்
4. மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள்
5. குடும்ப நபர்களில் யாருக்கேனும் இந்த நோய் இருந்தால்

யோசித்துப் பார்த்தால் – 10-ல் குறைந்தது 8 பேருக்காவது மேற்குறிப்பிட்ட 5 காரணங்களில் ஒன்றாவது இருக்க வாய்ப்புண்டு. நாம் சும்மாவே பயந்து சாகிறவர்கள். இப்படி பிரபல பத்திரிகையில் வேறு வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாகவே நம் மனம் நம்ப ஆரம்பித்து விடும். Awareness என்ற பெயரில் இப்போது பத்திரிகைகளும் டாக்டர்களும் நிறைய பயமுறுத்தி விடுகிறார்கள்.

சரி எதற்கும் ஒரு டெஸ்ட் எடுத்துப் பார்த்து விடலாம் என்று hospital போனால் அவ்வளவுதான். இல்லாத நோயை வரவழைத்து இருக்கும் நிம்மதியை பறித்துக் கொள்வார்கள். நம் உடல் நலனிலும் மன நலனிலும் அக்கறை செலுத்துவது என்பது வேறு. இது வந்து விடுமோ அது வந்து விடுமோ என்று பயந்து கொண்டே இருப்பது வேறு.

இந்த நோய் வந்து விடுமா அல்லது அந்த நோய் வந்து விடுமா அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வதாலேயே எந்த நோயையும் தடுத்து விட முடியாது. எனக்குத் தெரிந்த சிலர் சீக்கிரம் hospital போகாமல் இருந்திருந்தால் கொஞ்சம் late ஆக late ஆகி இருப்பார்கள்.

நாம் மருத்துவத்தின் முக்கியதுவத்தை மறுக்கவும் வேண்டாம். அதே நேரத்தில் நோயைக் கொண்டாடவும் வேண்டாம். சிலர் எப்போதும் “எனக்கு இரண்டு நாளா தலை வலி. நான்கு நாளா கழுத்து சுளுக்கு, கை பிசகு என்று ஏதாவது ஒரு உடல் உபாதையை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதுவும் ஒரு வகையில் attention seeking தான். ஆனால் அப்படி சொல்லி சொல்லி கண்டிப்பாக அந்த நோயை வரவழைத்துக் கொள்வார்கள்.

நாம் எதை அதிகம் எதிர்பார்க்கிறோமோ அதை நாம் ஈர்க்கிறோம் – அது நல்லதோ அல்லது கெட்டதோ. நம் வீட்டில் உள்ள குழந்தை நடக்க ஆரம்பிக்கும்போதே “ஓடாதே, விழுந்துடுவே” என்றால் குழந்தை விழுவதற்கான chance மிக மிக அதிகம். அதற்குப் பதில் “பார்த்து ஓடு” என்று சொல்லலாம்.

நான் பணி புரிந்த அலுவலகத்தில் ஒரு உயர் அதிகாரி இருந்தார். அவரிடம் சென்று sir நாளை திருப்பதிக்கு போகிறேன் என்று சொன்னால், பார்த்து போய் வாருங்கள். போன வாரம் கூட மலையில் ஒரு bus accident ஆகி விட்டது என்று சொல்வார். ஏண்டா இவரிடம் சொன்னோம் என்று நினைக்க வைத்து விடுவார். திருப்பதி மலையின் ஒவ்வொரு திருப்பத்திலும் “கோவிந்தா கோவிந்தா” என்று பக்தர்கள் சொல்லும்போது அந்த உயர் அதிகாரி நம் கண் முன்னால் வந்து வந்து செல்வார். நாம் வேண்ட இருந்த எல்லா விஷயங்களும் மறந்து போய், ஒழுங்கா வீடு வந்து சேர்ந்தா போதும் சாமி என்று நினைக்க வைத்து விடுவார். அவர் சொன்ன ஒரு negative விஷயமே நம் மனதில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றால், நாம் தினமும் படிக்கும், பார்க்கும் அல்லது கேட்கும் negative விஷயங்கள் நம் மனதை எவ்வளவு பாதிக்கும். அதனால் முடிந்த வரை negative விஷயங்களை avoid செய்வோம்.

“துன்பப் பறவைகள் நம் தலைக்கு மேல் பறப்பதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவை நம் தலைக்கு மேல் கூடு கட்டுவதை தவிர்க்க முடியும்” என்று ஒரு பழமொழி உள்ளது. அதனால் நாம் தினமும் negative-ஆன பல விஷயங்களை கடக்க வேண்டி இருந்தாலும், எதையும் நம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் நம் வேலையைப் பார்ப்போம்.

Again, பாரதி சொன்னதுதான் “தின்று விளையாடி இன்புற்று வாழ்வீர்” (தின்பதில் பிரச்சினை இல்லை – ஓடி ஆடி விளையாடமல் இருப்பதுதான் நம் பெரும்பாலோருடைய பிரச்சினை).

அனைவருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.