சமீபத்தில் ஓஷோவின் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். இணங்கி இருக்கும் கலை என்ற தலைப்பில் கொடுக்கப் பட்டிருந்த அவருடைய கருத்துக்கள் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருந்தது. நம்முடன் நாம் கொண்டிருக்கும் உறவுதான் அடுத்தவருடன் நாம் கொண்டிருக்கும் உறவுக்கும் அடிப்படை என்ற அவருடைய கருத்து மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்று.
இதோ ஓஷோவின் வார்த்தைகள். அன்பு என்பது அடுத்தவருடன் இணங்கி இருக்கும் கலை. தியானம் என்பது நீ உன்னுடன் இணங்கி இருத்தல். அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தன்னுடன் எப்படி இருப்பது என்று தெரியாத ஒருவரால் மற்றவருடன் உண்மையாக தொடர்பு கொள்ள முடியாது. அவரது உறவுகள் அருவெறுக்கதக்கதாக, அசிங்கமானதாக, விபத்து போல, இருக்கும். ஒரு நிமிடம் எல்லாமும் நன்றாக இருக்கும், மற்றொரு நிமிடம் எல்லாமும் தவறாகி விடும். அது எப்போதும் மேலும் கீழுமாக சென்று வரும். அதற்கு ஆழமிருக்காது. அது மிகவும் கூச்சலிடும். அது உன்னை ஆக்ரமித்திருக்கும். ஆனால் அதில் எந்த லயமும் இருக்காது, அது உன்னை இயற்கையின் உயரங்களுக்கோ, இருப்பின் ஆழங்களுக்கோ எடுத்துச் செல்லாது.மற்றொரு வகையிலும் இது அப்படித்தான். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவருக்கு தன்னுடன் தொடர்பு கொள்வதும் மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் தொடர்பு கொள்ளும் கலை என்பது அதேதான். உன்னுடன் நீ தொடர்பு கொள்வதோ, அன்றி மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதோ ஒன்றேதான். அதில் எந்த வித்தியாசமும் இல்லை.இவை ஒரே நேரத்தில் சேர்ந்தே கற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவற்றை பிரிக்க முடியாது. மக்களுடன் இரு. தன்னுணர்வின்றி இருப்பது போல இருக்காதே. உணர்வுடன் இரு. புல்லாங்குழல் வாசிப்பது போல, ஒரு பாடல் பாடுவது போல மக்களுடன் தொடர்பு கொள். ஒவ்வொருவரும் ஒரு இசைக் கருவி போல. மரியாதை கொடு, அன்பு செய், அவர்களை ஆராதனை செய். ஏனெனில் ஒவ்வொருவருக்குள்ளும் இறைமை ஒளிந்திருக்கிறது.அதனால் மிகவும் கவனமாக இரு. மிகவும் ஈடுபாட்டுடன் இரு. நீ சொல்வது என்ன என்பதில் கவனமாக இரு. நீ என்ன செய்கிறாய் என்பதில் கவனமாக இரு. சிறிய விஷயங்கள் உறவை சிதைத்துவிடும். சிறிய விஷயங்கள் உறவை மிகவும் அழகாக்கிவிடும். சில நேரங்களில் ஒரு புன்னகை கூட அடுத்தவரின் இதயத்தை உனக்கு திறந்துவிடும். சில நேரங்களில் உன்னுடைய கண்களில் இருக்கும் ஒரு தவறான பார்வை கூட அடுத்தவரின் இதயத்தை மூடி விடும். இதுதான் மிக மென்மையான செயல்பாடு. இதை ஒரு கலை. ஒரு ஓவியன் வண்ணத்திரையில் எவ்வளவு கவனமாக வரைவானோ அதைப் போலத்தான் இதுவும். ஒரு கோடு கூட வித்தியாசத்தை உண்டாக்கி விடும். ஒரு உண்மையான ஓவியனால் ஒரு சிறிய கோட்டின் மூலம் மிகப் பெரிய வித்தியாசத்தை கொண்டு வர முடியும்.வாழ்க்கையை மிகவும் கவனத்துடன், மிகவும் மென்மையாக நுணுக்கமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதனால் மற்றவர்களுடன் நாம் தொடர்பு கொள்வது என்பது ஒரு கண்ணாடி போல. நீ என்ன செய்கிறாய், அதை எப்படி செய்கிறாய், என்ன நிகழ்கிறது என்று பார். அடுத்தவர்களுக்கு என்ன நிகழ்கிறது, நீ அவர்களது வாழ்க்கையை துயரமானதாக மாற்றுகிறாயா, நீ அவர்களுக்கு வலி கொடுக்கிறாயா, நீ அவர்களுக்கு ஒரு நரகமாக மாறுகிறாயா, அப்படி என்றால் விலகிவிடு. உன் வழியை மாற்றிக் கொள். உன்னைச் சுற்றி வாழ்க்கையை அழகாக்கு. உன்னை சந்திக்கும் ஒவ்வொருவரும் அதை ஒரு பரிசாக உணர வேண்டும். உன்னுடன் இருப்பதாலேயே ஏதோ ஒன்று பொங்கி பெருக வேண்டும், ஏதோ ஒன்று வளர வேண்டும், இதயத்துள் பாடல் மலர வேண்டும், மலர்கள் மலர வேண்டும். தனிமையில் இருக்கும்போது மௌனத்தில் இரு, நிசப்ததில் இரு, உன்னை நீயே கவனி.எப்படி பறவைக்கு இரண்டு சிறகுகள் இருக்கிறதோ அது போல அன்பும் தியானமும் உனது இரண்டு சிறகுகள் ஆகட்டும். அவை இரண்டிற்க்கும் ஒத்த லயத்தை உருவாக்கு. அப்போது அவை இரண்டும் ஒன்றுகொன்று பிளவுபடாது, ஒன்றையொன்று வளப்படுத்தும், ஒன்றுகொன்று ஊட்டப்படுத்தும், ஒன்றுக்கொன்று உதவும். இதுதான் உன் பாதை. அன்பும் தியானமும் ஒருங்கிணைந்தது.