Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

Celebrate the Life – The Krishna Way

August 17, 2014

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் திருப்பாவை

பொருள்: தேவகியின் மகனாகப் பிறந்து, ஒரே இரவில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வந்து யசோதையிடம் சேர்ந்தவனே. உன்னால் தனக்கு கேடு வரும் என்று நினைத்துப் பயந்த கம்சன் உன்னை அழிக்க நினைத்தான். ஆனால் நீயோ அதை தவிடுபொடியாக்கி, அவனது வயிற்றில் நெருப்பைப் போல பயத்தை உண்டாக்கி நின்றாய்.

நான் சென்ற வருடம் Mount Kailash – Manasarovar சென்று திரும்பிய நாள் கிருஷ்ண ஜெயந்தி. நான் இதை ஒரு “good omen” என்றே எப்போதும் நினைப்பேன். ஏனென்றால் கண்ணன் காட்டிய வழியில் நடந்தால் நம்மால் வாழ்க்கையை எந்த சூழ்நிலையிலும் positive ஆக மாற்றிக் கொள்ள முடியும்.

வெண்ணை திருடிய “திருட்டு” கண்ணன், கோபியரோடு கொஞ்சிய “குறும்பு” கண்ணன், போர்க்களத்தில் அர்ஜுனன் மூலமாக உலகுக்கே புத்தி சொன்ன “விஸ்வரூப” கண்ணன், இதையெல்லாம் சற்று விலக்கி விட்டு கண்ணன் பிறந்த சூழ்நிலையை எண்ணிப் பார்ப்போம். மேலே ஆண்டாள் கூறியபடி “ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர” வேண்டிய சூழல். தனக்கு முன் பிறந்த குழந்தைகளை எல்லாம் தன்னுடைய தாய்மாமன் கம்சன் கொன்ற நிலையில், தான் வயிற்றில் இருக்கும்போது தன்னுடைய தாயுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் (குழந்தை வயிற்றில் இருக்கும்போது தாய் இருக்கும் மனநிலை குழந்தையை பாதிக்கும் என்ற வாதத்தைப் பொய்ப்பித்தவன் கண்ணன் – கண்ணன் கடவுளின் அவதாரம் என்பதை கொஞ்சம் ஒதுக்கி வைத்துப் பார்த்தால்).

வளரும் பருவம் முழுவதும் தன்னை பகை சூழ்ந்த நிலையிலும் வாழ்க்கையை கொண்டாட மறக்காதவன். போர்க்களத்தில் பாண்டவர்களின் பக்கம் இருந்தாலும் கௌரவர்களின் மீது பகைமை கொள்ளாதவன்.

தன்னுடைய சொந்த சோகங்களைப் பற்றி புலம்பிக் கொண்டு இருக்காமல், போர்க் காலத்திலும் (அல்லது போர்க் களத்திலும்) வாழ்வாங்கு வாழ்வதை கீதை மூலமாகச் சொன்னவன் கண்ணன்.

கண்ணன் மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் “Celebrate the Life – Inspite of your Odds”.

மேலே உள்ள படத்தில் புன்னகை பூத்துக் கொண்டிருப்பவன் எங்கள் வீட்டில் எங்களோடு கொண்டாட வந்த கண்ணன்.

அனைவருக்கும் “கிருஷ்ண ஜெயந்தி” நல்வாழ்த்துக்கள்.