Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

November 17, 2015

கடந்த வாரம் வரை வெயிலில் வெண்ணையாக உருகிக் கொண்டிருந்த சென்னை திடீரென்று நடுக்கடலில் கப்பலை இறங்கித் தள்ள முடியுமா என்று சோக கீதம் பாட ஆரம்பித்து விட்டது. Thanks to the unprecedented rain.

ஆனால் இடுக்கண் வரும்போதும் நகும் நக்கல் நம் மக்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே உண்டு. அதனால்தான் தண்ணீர் இல்லாதபோது கழுதைக்கு கல்யாணம் பண்ணி வைத்தவர்கள் இப்போது மழையை நிறுத்த அந்த கழுதையை தேடிக் கொண்டிருக்கிறார்கள் – divorce செய்து வைக்க.

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுவாய் இயற்கை அன்னை மடை திறந்த வெள்ளம் போல மழையை நமக்கு கொடுத்தும் நாம் ஓட்டை குடங்களை வைத்துக் கொண்டிருந்தால் கோடைக் காலத்தில் காலி குடங்களைத்தான் வைத்துக் கொண்டு தண்ணீருக்கு அலைந்து கொண்டிருப்போம்.

There is enough available for everyone’s need, but there is never available for anyone’s greed என்று சொல்வார்கள். ஒவ்வொரு கோடைக் காலத்திலும் நாம் தண்ணீருக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்று அண்டை மாநிலங்களுடன் மல்லுக் கட்ட வேண்டிய தேவையே இல்லை – ஒழுங்காக மழை பெய்யும் போதே சேமித்து வைத்தால்.

நுங்கம்பாக்கம் lake view ரோடு இருக்கிறது. Lake எங்கே ?மொகப்பேர் ஏரி Scheme இருக்கிறது. ஏரி எங்கே?

இப்படி சென்னையிலும் சென்னையை சுற்றியும் உள்ள நூற்றுக் கணக்கான ஏரிகளையும் குளங்களையும் தூர்த்து பிளாட் போட்டு விட்டால் (விற்றால்) மழைக்கு தண்ணீர் வராமல் தயிரா வரும் (கோபத்தில் வேறு வார்த்தை வந்தது. ஆனால் நாகரீகம் கருதி சொல்லவில்லை).

அரசாங்கத்தை Jaya டிவி யைத் தவிர எல்லோரும் திட்டித் தீர்த்தாகி விட்டது. அரசாங்கத்தை மட்டுமே குறை சொல்வதால் நம் கோபம் கொஞ்சம் குறையலாம். அவ்வளவுதான். இந்த அரசாங்கம் மட்டும் அல்ல எந்த அரசாங்கமும் தும்பை விட்டு விட்டு வாலைத் தான் பிடித்துக் கொண்டிருகிறது. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. அல்லது மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி.

நாம் மட்டும் என்ன செய்கிறோம். அண்ணாந்து பார்த்து காரி உமிழ்வது போல plastic குப்பைகளை கண்ட இடத்திலும் வீசி எறிகிறோம். மழைக் காலத்தில் தண்ணீர் வேகமாக வெளியேற முடியாமல் அடைத்துக் கொண்டு நம் மீதே துப்புகிறது.

சில விஷயங்களை அரசாங்கம்தான் செய்ய முடியும். ஏரி மராமத்து, அணையை பலப்படுத்துதல், புதிய நீர்நிலையை உருவாக்குதல் அல்லது இருக்கும் நீர் நிலையை ஒழுங்காக பராமரித்தல், இவை எல்லாம் அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியும்.

அதே நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்யக் கூடிய சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக செய்தாலே நமக்கு ஏற்படும் பாதிப்பை பெருமளவு குறைக்க முடியும். நம் வீட்டில் மழை நீர் சேகரிப்புத் திட்டம், குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல் இருத்தல், வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க முடியாவிட்டாலும் ஒரு செடியாவது வளர்த்தல், இப்படி ஒவ்வொருவரும் செய்யக் கூடிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

இப்போது சில நாட்களுக்கு கஷ்டப்பட்டாலும் இரண்டு வருடங்களுக்குத் தேவையான தண்ணீர் இருப்பு வந்து விட்டதால் கண்டிப்பாக இந்த மாமழையை போற்றுவோம்.