“பாலில் விழுந்த பழங்களைப் போல
பருவம் உருவம் நிறைந்தவள் நீயே
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆடவந்தாயே”
தேன் நிலவு என்ற படத்தில் A.M. ராஜாவும் ஜானகியும் பாடிய இந்தக் காதல் பாடல் மிகவும் பிரபலம் (நீங்கள் 30 அல்லது 40 வயதைக் கடந்தவராக இருந்தால்).
ஆனால் சமீபமாக இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கலைஞரும் கேப்டனும்தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.
மயக்கும் விழிகளைக் (அல்லது மயங்கிய விழிகளை) கொண்ட கருப்புக் கன்னி விஜியை (அப்படித்தான் கலைஞர் கேப்டனை அழைப்பார்) பழம் நழுவி பாலில் விழுகிறது என்று கலைஞர் சொல்ல அந்தப் பழம் பாலில் விழுவதற்குப் பதில் காலில் விழுந்துவிட்டது.
கலைஞர் விஜயகாந்த் காலில் விழாத குறையாக கெஞ்சியது ஒருபக்கம் இருக்க, தலைவரும் தொண்டரும் என்று சகலமும் தானே இருக்கும் சரத்குமார் பாஜகவில் தான் கூட்டணி சேர்ந்து விட்டதாக அறிவித்த பிறகும் அவரை மீண்டும் இரும்புத் தலைவி (?) ஜெயலலிதா சேர்த்துக் கொண்டதைப் பார்க்கும் போது திமுக அதிமுக இரண்டும் மீண்டும் முதல்வர் நாற்காலிக்காக இன்னும் என்னவெல்லாம் செய்வார்கள் என்று தெரியவில்லை.
உண்மையில் பழம் நழுவி பாலில் விழுந்தது விஜயகாந்துக்குதான். இந்த முறை தனியாக அவர் நின்று இருந்தால் அவர் டப்பா டான்ஸ் ஆடியிருக்கும். நல்ல வேளை கம்யூனிஸ்ட் தோழர்களும், வைகோவும், திருமாவும் அவருக்கு பல்லக்கு தூக்க தயாராகிவிட்டார்கள்.
எனக்கு வைகோவை நினைத்துத்தான் வருத்தமாக இருக்கிறது. மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர், சிறந்த வழக்கறிஞர், என்று பல தகுதிகள் பெற்றவர். தமிழக அரசியலில் திமுக அதிமுக தலைமைகளைத் தவிர முதல்வர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளவர். அப்படிப் பட்டவர் தன்னை விட கொஞ்சம் கூட்டம் அதிகம் சேருகிறது என்பதற்காக விஜயகாந்த் காலில் விழுந்திருக்க வேண்டியதில்லை.
இனி என்ன, பல்லக்கில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டு “த்தூ…. தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க” போன்ற கேப்டன் வசனத்தில் உருவான மீம்ஸ்களை அவரே ரசித்துக் கொண்டு ஊர் ஊராக தேர்தல் சுற்றுப் பயணம் செய்யலாம்.
கேப்டன் என்ன பேசினார் என்று மறுநாள் செய்தித்தாளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இனி இல்லை. வைகோவும் திருமாவும் நல்ல பேச்சாளர்கள். கேப்டன் தமிழில் பேசியதை அவர்கள் மீண்டும் தமிழில் மொழி பெயர்த்து (??) நமக்குச் சொல்லி விடுவார்கள்.
வாழ்க ஜனநாயகம்.