Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

பிரளயம்

December 25, 2015

இயற்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவுமே எப்போதோ எங்கோ நடைபெற்ற சம்பவம்தான். நமக்குத்தான் புதிது. வரலாறு காணாத மழை என்று நாம் சொன்ன மழையும் வரலாறு கண்டதுதான். நமக்கு வரலாற்றுக் குறிப்புக்கள் இல்லை அவ்வளவுதான்.

நேற்று ஜெயகாந்தனின் பிரளயம் என்ற குறுநாவலை படித்தேன். 1965-ல் வெளிவந்த இந்தக் கதையும் சென்னையின் வெள்ளம் பற்றியதுதான். 50 வருடங்களுக்குப் பிறகும் அதே வெள்ளம், மக்கள் மழைக்கு பள்ளிக்கு ஒதுங்குதல், உணவுப் பொட்டலங்கள் மற்றும் பிற அவதிகள். இந்த வெள்ளத்தின் நடுவில் கதை செல்கிறது. கதையின் நடுவில் அவரின் சில வரிகள்:

“சென்னை நகரின் பல பகுதியிலுள்ள சேரிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல பிரதான ரஸ்தாக்களில் கூட மரங்கள் வீழ்ந்தும், முழங்காலுக்கு மேல் ஆறாக மழை நீர் பாய்ந்தும் போக்குவரத்துக்கள் ஸ்தம்பித்து இருந்தன. தினசரிப் பத்திரிகைகள் எல்லாம் அந்தக் காட்சியைப் படம் பிடித்துப் போட்டுப் பிரசுரித்தும், பேய் மழை என்று தலைப்பிட்டும், புயல் உருவாகி வருகிறது என்று எச்சரித்தும் மழையால் விளைந்த நாசங்கள் குறித்துச் செய்திகள் வெளியிட்டன. இவை எல்லாவற்றுக்கும் சிகரம்போல் உதவிக்கு ஓடோடி வரும் நகரப் பிரமுகர்களின் வள்ளண்மையைக் குறித்து அவை புகழ் பாடின. பள்ளிகளுக்குக் குடியேறியுள்ள சேரிவாசிகளுக்கு சில பெரிய மனிதர்கள் ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்தார்கள்”

“எப்படியோ கஷ்டப்பட்டு, மானத்தோடு கஞ்சி குடித்து நேற்றுவரை வாழ்ந்திருந்த இவர்கள், இன்று மழையின் காரணமாக வீடிழந்து நிற்கிறார்கள்…. எதன் காரணமாக இப்போது மானத்தை இழந்தனர் ?…”

2015-ல் நாம் கண்ட இந்த வெள்ளத்துக்கும், அந்த வெள்ளத்துக்கும் உள்ள முக்கிய வித்தியாசம். 1965 கதையில் வந்த வெள்ளம் அடித்தட்டு மக்களை மட்டும் பாதித்தது. இந்த வெள்ளம் அடித்தட்டு, நடுத்தட்டு, மேல்தட்டு என்று எல்லா தட்டு மக்களையும் ஒரு தட்டு தட்டி விட்டது (வேட்டியை மடித்து பல பேரை சினிமாவில் புரட்டிய ராஜ்கிரண் கழுத்தளவு வெள்ளத்தில் புரண்டு பரிதாபமாக படகில் காப்பாற்றப் பட்டது முதல் கோடிகளின் அதிபர் அஸ்வின் முத்தையா லுங்கியோடு படகில் சென்றது வரை – மழை எல்லோரையும் சமப்படுத்திவிட்டது).

இந்த மழையினால் விளைந்த மனித நேயத்தைப் பற்றி எல்லோரும் பேசியாகிவிட்டது. நம்மில் பலர் சில ஆயிரம் அல்லது சில இலட்சம் ரூபாய் கொடுத்தது முதல், உணவு, உடை, உறைவிடம் வழங்கியது முதல் பல உதவிகளை செய்திருக்கலாம். நாம் எவ்வளவு கொடுத்தாலும் அது வாழ்க்கையில் நாம் பெறுவதைக் காட்டிலும் குறைவுதான். ஆனால் உண்மையில் அதிகம் கொடுத்தவர்கள் என்று சிலரை மழை அடையாளம் காட்டி இருக்கிறது.

சென்னையின் பல பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய பலரைக் காப்பாற்றி தன்னுடைய இன்னுயிரை இழந்த பல இளைஞர்கள் இருக்கிறார்கள். பெயர் தெரிந்தவர் சிலர், பெயர் தெரியாதவர் பலர்.

நாட்டைக் காப்பாற்ற தன்னுடைய உயிரைத் தியாகம் செய்யும் வீரர்களை அரசாங்கம் கௌரவித்து அவர்களின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை செய்கிறது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் போராட்டத்தில் தன்னுடைய உயிரை இழந்த இந்த இளைஞர்களும் அத்தகைய வீரர்கள்தான். இந்த விஷயத்தில் அரசாங்கம் எந்த அரசியலும் பார்க்காமல் அவர்களை கௌரவித்தால் அது நமக்குப் பெருமை. இதைப் பற்றி யாரேனும் ஏற்கனேவே பதிவு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஜெயகாந்தன் பிரளயம் கதையை இப்படி முடித்திருந்தார். “ஒரு பிரளயமே வந்து இந்த உலகை அழித்தாலும் அது மீண்டும் புதிதாய்ப் பிறக்கும். கேவலம் இந்த மழையா வந்து மனிதர்களின் வாழ்வுக்கு முடிவு கட்டிவிடும்”.