Blog-Image

Mundril - ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் சற்றே ஓய்வெடுக்க...

ஆல்கஹால் என்ற ஆட்கொல்லி

May 19, 2018

முருகன் எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன் (என் பெரியப்பா மகன்). சிறுவனாக இருந்தபோது அவரின் மிகுந்த அன்புக்கு உரியவன் நான். நான்தான் படிக்கலை. நீயெல்லாம் நல்லாப் படித்து பெரிய ஆளா வரணும் என்று எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார். எம்ஜியாரின் தீவிர ரசிகா். வீட்டின் சுவரெல்லாம் மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், மீனவ நண்பன் என்று பலவாறு எம்ஜியார் சிரித்துக் கொண்டிருப்பார். என் அண்ணனும் உடலை நன்கு பார்த்துக் கொள்வார். இப்போது போல் அப்போதெல்லாம் ஜிம்முக்கு போகாமலேயே ஜம்மென்று இருப்பார். அவா்கூட இருக்கும் நேரங்களில் மிகவும் பாதுகாப்பாக இருப்பது போன்று ஒரு உணா்வு இருக்கும்.

அவருக்கு எப்போது குடிப்பழக்கம் ஏற்பட்டது என்று தெரியாது. அவரது உடல் கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலையத் தொடங்கியது. 70 அல்லது 80 வயதுக்குப் பிறகும் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்க வேண்டியவா் 35 வயதிலேயே முழுவதுமாக உருக்குலைந்து விட்டார். கடைசியில் அவரை மருத்துவமனையில் பார்த்தபோது அவா் கண்கள் கலங்கியிருந்தன. ”நல்லா படிப்பா” என்று கரகரத்த குரலில் சொன்னபோது அவா் இந்த உலகத்தினை விட்டு நழுவிக்கொண்டிருந்தார் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

மதுவுக்கு அடிமையாகாமல் இன்றும் அவா் இருந்திருந்தால் அவா் குடும்பத்துக்கும் எங்களுக்கும் மிகப்பெரிய பலமாக இருந்திருப்பார். மதுவின் வாடை எனது மனதுக்கு எப்போதும் செல்லக்கூடாது என்று நான் எடுத்த முடிவுக்கு முக்கிய காரணம் என் முருகன் அண்ணன்தான்.

அடுத்து நான் பணிபுரிந்த அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஷமிம். இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரா். ஆள் பார்ப்பதற்கு நல்ல வாட்டசாட்டமாக இருப்பார். எங்கள் அலுவலகத்தில் அட்மின் அதிகாரியாக பணிபுரிந்தவா். அவா் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. நல்ல மனிதர். அவரும் கொஞ்சம் கொஞ்சமாக குடியில் தன்னை இழந்தவா்தான்.

அந்த நிறுவனத்திலிருந்து நாங்கள் விலகியபோதும் இருவருக்குமான நட்பு தொடா்ந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அவரை சந்திக்க நோ்ந்தபோது அவரும் குடியில் தன்னை முழுவதுமாக இழந்திருந்தார். என்னை பார்த்த போது கடனாக கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது என்று சொன்னார். அவரால் திருப்பிக் கொடுக்கமுடியாது என்று தெரிந்தும் அவா் எதற்காக அந்தப் பணத்தை கேட்கிறார் என்று தெரிந்தும் நட்புக்காக அவா் கேட்ட பணத்தினை கொடுத்தேன். அதற்குப் பிறகு அவரை சந்திக்கவே இல்லை.

அன்பான குடும்பம் நல்ல குழந்தைகள் என்று இருந்தும், நீண்ட ஆண்டுகள் நலமாக வாழ்ந்திருக்கவேண்டியவா் இன்று இல்லை. இந்தப் பதிவை இப்போது எழுதுவதன் முக்கிய நோக்கம், இன்று இந்தியாவிலேயே அதிக மதுப்பழக்கம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு வந்து கொண்டிருக்கிறது என்ற செய்திதான். குடிப்பழக்கம் என்பது காலம் காலமாக இருந்து வருவதுதான். ஆனால் தெருவுக்கு தெரு டீக்கடைகளை போல் டாஸ்மாக் கடைகள் இருப்பதும், இருபது வயதுகூட நிரம்பாத சிறுவா்களும், நடுத்தர வயது ஆண்களும் எந்தவிதமான உறுத்தலுமின்றி நடுத்தெருவில் நின்று குடித்துக் கொண்டு இருப்பதை பார்க்கும்போது எத்தனை ஆயிரம் முருகன் அண்ணாக்களும் ஷமிம்களும் தங்கள் குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுச் செல்வார்களோ என்ற பதட்டம் ஏற்படுகிறது.

”கொழுந்து விட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு எத்தனை நாளைக்கு தான் தன்னை பாதுகாத்துக் கொள்ளமுடியும்” என்று சொல்லி 1971-ம் ஆண்டு மதுவிலக்கை தளர்த்திய கருணாநிதியும், ”என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என்று என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக்கொள்கிறேன்” என்று சொல்லிய இரண்டே ஆண்டுகளில் மதுவிலக்கினை தளர்த்திய எம்ஜியாரும், ”மதுவிலக்கினை படிப்படியாக கொண்டுவருவோம்” என்று சொல்லி மறுபடியும் ஆட்சிக்கு வந்து இன்று வரை ஒருபடிகூட ஏறாத இன்றைய அதிமுக அரசு என்று எல்லோரும்தான் இன்றைய தமிழக நிலைக்குக் காரணம். தமிழகத்துக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்பதெல்லாம் ஒரு வடிகட்டிய பொய். ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கிடைக்கும் கோடிக்கணக்கான பணம்தான் இப்படி தமிழகத்தை சீரழிப்பதற்கு முக்கிய காரணம்.

முழுமையான மதுவிலக்கு என்பது கண்டிப்பாக நடைமுறையில் அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. ஆனால் கண்டிப்பாக எந்த அரசாங்கம் நினைத்தாலும் ஒரளவுக்காவது நடைமுறைப்படுத்த முடியும். ஊருக்கு ஆயிரம் கடைகள் இருப்பதை பாதியாகக் குறைக்கலாம். காலையில் இருந்து இரவு வரை திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அது உண்மையோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான குடிகளை கெடுக்கும் இந்த குடியால் கிடைக்கும் பணத்தை சுயநலமாக அனுபவிக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் அல்லது அதிகாரியும், தங்கள் சந்ததியினருக்கு தீராத பாவத்தினை சோ்க்கிறாரா்கள் என்று உணர வேண்டும். அப்படி உணரும்போது நாம் எதிர்பார்க்கும் மதுவிலக்கு என்ற நிலை உருவாகலாம்.

இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் உங்கள் குடும்பத்தின் தலைவராகவோ அல்லது மூத்த உறுப்பினராகவோ இருக்கலாம். நீங்கள் குடிப்பழக்கம் உள்ளவராகவோ அல்லது குடிப்பழக்கம் இல்லாதவராகவோ இருக்கலாம். ஆனால் உங்கள் குடும்பத்தில் உள்ள அடுத்த இளையதலைமுறை இந்த பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த மதுப்பழக்கம் பொதுவாக 15 வயதிலிருந்து 30 வயதுக்குள் ஏற்படுகிறது. நண்பா்களின் பிறந்த நாள், கல்யாணம், அலுவல் நிமித்தமாக அல்லது காதல் சோகம் என்று இந்தப் பழக்கத்தினை ஆரம்பிப்பதற்கு ஒரு காரணம் தேவைப்படுகிறது. தொடா்வதற்கு ஒரு காரணமும் தேவையில்லை.

மதுப்பழக்கம் என்பது முதலில் சிலந்தி வலையைப் போல மனிதா்கள் மீது படா்கிறது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த சிலந்தி வலை ஒரு இரும்புச் சங்கிலியாக இறுகி மதுப்பழக்கத்திற்கு அடிமையானவா் அதிலிருந்து விடுபட நினைத்தாலும் அதிலிருந்து மீளமுடியாமல் செய்து விடுகிறது. அப்படி இறந்தவா்கள் இளைஞா்களாகவோ அல்லது நடுத்தர வயதானவா்களாகவோ இருந்தால் அவா்கள் குடும்பத்தினரையும் அவா்களது மரணம் நடைப்பிணமாக்கி விடுகிறது.

மதுப்பழக்கம் இல்லாத அடுத்த தலைமுறையை உருவாக்குவது நம்மிடமிருந்தே தொடங்கட்டும். அரசியல் மாற்றம் தானாக வரும்.